திடீர் மாரடைப்பால் விபத்து; 40 பேரின் உயிரை காத்த பேருந்து சாரதி உயிரிழப்பு
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவாலஹிந்த பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த பஸ்ஸானது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பயணிகள் உயிரை காப்பாற்றி உயிரிழந்த சாரதி
இதனையடுத்து, பஸ்ஸின் சாரதி இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரகஹகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சாரதி ஏற்கனவே சுகயீனமுற்று இருந்துள்ள நிலையில் பஸ்ஸில் பயணிக்க வேண்டாம் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ள போதிலும் வேறு சாரதி இல்லை என்பதால் இவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது, பஸ்ஸில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ள நிலையில் ஒரு பயணிக்கு மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.