டெல்லி புகையிரத கூட்ட நெரிசலில் பலர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
புதுடெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 11 பெண்கள் மற்றும் 04 குழந்தைகளும் அடங்குவதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகாகும்பமேளாவால் சன நெரிசல்
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் கூடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக இந்திய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப் பிரிவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுமார் 1,500 முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் விற்பனையானதும், ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதமாக வந்ததும் இச் சம்பவதிற்கு காரணம் என ரயில்வே துணை பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு புதுடெல்லி ரயில் நிலையத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி துணை நிலை ஆளுநர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.