அதிஅபாய மண்டலங்களாக மாறும் நாட்டின் பல பகுதிகள் ; தீவிரமாகும் டெங்கு நோய் பரவல்
நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயாளர்கள் எண்ணிக்கை
மாவட்ட ரீதியில் பார்க்கும்போது கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 17,779 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16,665 நோயாளர்கள் கண்டறியப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. மாகாண மட்டத்தில் மேல் மாகாணம் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றது.
மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 12,586 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் 175 பகுதிகள் 'அதிஅபாய மண்டலங்களாக' சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அழித்து கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விழிப்புடன் செயல்பட வேண்டும் எனச் சுகாதார அதிகாரிகள் தீவிர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.