தமிழர் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; கைதான 25 வயது இளைஞன்
களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் புதன்கிழமை (29) தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த வாரம் புதன்கிழமை (22) களுவாஞ்சிக்குடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல்போயுள்ளது.

அறிவுறுத்தல்
இவ்விடயம் தொடர்பில் அந்த நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதனையடுத்து, விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், செவ்வாய்க்கிழமை (28) அந்த மோட்டார் சைக்கிளையும் அதனைத் திருடிச் சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில், பாணமை பொலிஸாருடன் இணைந்து கைது செய்துள்ளதோடு, மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 25 வயது இளைஞர் எனவும், கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் 8 இலட்சத்துக்கும் அதிக பெறுமதி கொண்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர், வாகனத்தின் இலக்கத்தகட்டை மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது சரியான முறையில் பூட்டி, குறிப்பாக, மோட்டார் சைக்கிள் கென்ரின் பூட்டு செய்து, பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதனால் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.