நாட்டின் அரச ஊழியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு,
இன்று லைனில் நிற்கிறோம் என கண்ணீர் விடும் அரச ஊழியர்கள்தான் நாட்டின் ஆட்சியை தீர்மானித்தவர்கள் மற்றும் தீர்மானிப்பவர்கள்.
தன்னெழுச்சி போராட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் Go home gota என ஒரே நாளில் நாடுமுழுவதும் நிர்வாக முடக்கம் செய்து அரச ஊழியர்கள் போராடியிருந்தால் என்றோ போராட்டத்திற்கு தீர்வு கிடைத்திருக்கும் இன்றைய வரிசை வாழ்கையும் வந்திருக்காது.
இரசாயன உரம் தடையென்ற அறிவிப்பு வந்தவுடன் விவசாய திணைக்களம் சாந்த பல்லாயிரம் ஊழியர்களும் அது நாட்டை பட்டினிச்சாவுக்கு கொண்டுசெல்லும் இதற்கு நாம் ஆதரவில்லையென பணிப்புறக்கணிப்பு செய்திருந்தால் இன்று அரிசிக்காய் மக்கள் காத்திருக்க வேண்டியிருந்திருக்காது.
அரசாங்கமும் அரசியல்வாதிகளும் செய்த எல்லா முட்டாள்தனங்களுக்கும் முறைகேடுகளுக்கும் ஊழல்களுக்கும் அறிந்தோ அறியாமலோ துணைபோனவர்கள் இந்த அரச ஊழியர்கள்தான்.
நாட்டைப்பற்றி சிந்திக்காமல் நமக்கென்ன வந்ததென்று மாத முடிவு சம்பளத்தையும் சலுகைகளையும் இலக்காய் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களுக்கும் திருட்டுக்களுக்கும் ஆமாம் போட்டதன் விளைவுதான் உங்களையும் தெருவில் நிறுத்தியிருக்கிறது.
இலங்கையில் இன்று பிறந்த குழந்தையின் எண்ணிக்கையையும் சேர்த்து 15 நபர்களுக்கு ஒருவர் அரச ஊழியராக இருக்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தோடு ஒப்பிட்டால் 5 இல் ஒருவர் அரச ஊழியராக இருக்கின்றார்.
அரச உத்தியோகம் என்ற ஒற்றை கோசத்தை வைத்து அங்கஜன் ராமநாதனால் வடக்கில் அதிகூடிய விருப்பு வாக்கினை பெறும் அளவுக்கு அரச உத்தியோகம் மீதான மோகம் படித்த சமூகத்தில் இருக்கிறது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகரித்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையும் அரச தாபனங்களின் செலவுகளும்தான் காரணமென அரசாங்கமே ஒத்துக்கொண்டும் IMF பரிந்துரை செய்தும் அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வழியின்றி தவிக்கிறது அரசாங்கம்.
அரசியல்காரணங்களுக்காய் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் வாக்குப்பொறுக்கும் வாக்குறுதிகளுக்காய் நியமனங்களை கொடுத்து இன்று சம்பளம் கொடுக்க வழியின்றி பணத்தை அச்சிட்டு பணவீக்கத்தை ஏற்படுத்தி நாட்டை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துள்ளது.
இப்போதுகூட தாபனவிதிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக நாடு எக்கேடு கெட்டால் எமக்கென்ன எங்கள் சம்பளத்திற்கும் சலுகைகளுக்கும்தான் நாம் போராடுவோம் பொதுப்பிரச்சினைகளை பொதுமக்களே பார்த்துக்கொள்ளட்டுமென கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கான வரிசைகளும் நீண்டுகொண்டேதான் செல்லும்.
எவர் வந்தால் எமக்கு அதிக சலுகைகள் கிடைக்குமென பக்கம் பார்த்து வாக்குப்போடும் பழக்கம் படித்த சமூகத்திடமே இருக்கும் போது கால் போத்தில் சாரயத்திற்கு வாக்களித்தாய் நீயே போராடு எங்களுக்கு எதிலும் முதலிடம் கிடைத்தால் போதுமென்று பேசுவதுதான் முதல் முட்டாள்தனம். உழைக்கும் வர்க்கமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன் அரச ஊழியர்களின் எண்ணிக்கையே இன்று நாட்டின் பெரும் சுமை.
கார்மெண்ட்ஸ்சில் வேலை செய்தும், தேயிலை தோட்டங்களில் கொழுந்து கிள்ளியும், அந்நியச்செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தரும் சமூகத்தின் இரத்த்தத்தை உறிஞ்சும் அட்டைகளாகத்தான் அதிகரித்த எண்ணிக்கையில் இருக்கும் அரச ஊழியர்களை பார்க்கிறோம்.
கல்வி, மருத்துவம், பாதுகாப்பு தவிர்ந்த அனைத்து அரச துறைகளையும் தனியார் மயப்படுத்தவோ அல்லது தனியார் அரச கூட்டு நிறுவனங்களாக மாற்றவேண்டியதோ காலத்தின் கட்டாயம் இதை செய்யாமல் இலங்கையால் மீண்டெழ முடியாது.
ஊரில் ஒரு முதுமொழி சொல்வார்கள் "பசுமாடு அடித்து நாம்பன் மாட்டுக்கு கொடுத்த கதையென" அதே கதையாகத்தான் இருக்கும் இதை தவிர இலங்கை அரசாங்கம் பொருளாதார மீட்சிக்கு முன்னெடுக்கும் திட்டங்கள்.
எனினும் நாட்டை மீட்சிசெய்யவைக்கும் இத்திட்டத்திற்கு முதலாவது எதிர்ப்பை தெரிவிப்பவர்களாகவும் அப்போது நிர்வாக முடக்கம் செய்து போராடுபவர்களாகவும் இதே அரச ஊழியர்களே இருப்பார்கள் என சுப்ரமணிய பிரபா என்பவர் தனது உகநூலில் பதிவிட்டுள்ளார்.