இலங்கையில் போலியான ஓட்டுநர் உரிமங்களை தயாரித்து விநியோகித்த நபர் சிக்கினர்!
இலங்கையில் அச்சு அசலாக ஒரிஜினல் போன்றே சாரதி ஓட்டுநர் உரிமத்தை தயாரித்து நாடு முழுவதும் விநியோகித்து வந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு போலியான ஓட்டுநர் உரிமங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று நாரஹேன்பிட்டி Dabare மாவத்தைக்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் ஹோமாகம, கினிகத்தேன, கம்பளை, ஹங்கம, இரத்தினபுரி, வெயாங்கொட மற்றும் கந்தானை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு சொந்தமான சீல் கட்டை முத்திரைகள் காணப்பட்டன.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல், வழக்கறிஞர்கள் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் முத்திரைகள் போன்ற முத்திரைகளும் அவரிடம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்களுக்கு பணத்திற்காக போலியான சாரதி அனுமதிப்பத்திரத்தை உருவாக்கி கொடுத்ததாகவும், அதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட போலி ஆவணங்களையும் தாம் உருவாக்கியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மற்ற நபர்களும் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை அறிய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.