யாழில் அதிகரிக்கும் எண்ணிக்கை: வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வடக்கு மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
யாழில் டெங்கு காய்ச்சளால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்றைய தினம் (14-12-2023) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கணகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுகாதார பணிமனைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரடியாகவும், சூம் ஊடாகவும் கலந்துக்கொண்டனர்.
மேலும், இந்த மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், எனினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பிலும், டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அதிகாரிகளால் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
இதனையடுத்து, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.