சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த 18 வயது இளைஞர் ; அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் நெல்லை அம்பை அருகே சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக 18 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞனின் தந்தை சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகராறில் சித்தப்பாவுக்கு கத்திக்குத்து
தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த செம்பத்திமேடு தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜூவின் மகன் சதீஷ் (18). மேளக்கலைஞரான இவர் அவ்வப்போது கட்டிட வேலைக்கும் சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று அருகிலுள்ள கிராமத்திற்கு சென்ற சதீஷ், அங்குள்ள வீட்டின் பின்புறம் சென்று குளியலறையில் 17 வயது சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது.
இதை கவனித்த சிறுமி கூச்சலிட்டதால் சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் உறவினர்களுடன் சதீஷின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜூ சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த கல்லிடைக்குறிச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர்.
இதற்கிடையே, சிறுமியை எட்டிப்பார்த்ததாக சதீஷ் மீது அம்பை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் தனியாக புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சதீஷையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.