தமிழர் பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,500 கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி வலைப்பாடு களப்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட சுமார் 1,500 கடல் அட்டைகளுடன் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் எஸ்.எல்.என்.எஸ். புவனேக கப்பலைச் சேர்ந்த கடற்படையினர், அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளைக் கொண்டு சென்ற சிறிய படகை வழிமறித்து சோதனையிட்டபோது இந்தக் கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, கிளிநொச்சி கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், படகு மற்றும் மீட்கப்பட்ட கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.