Gen Z தலைமுறையினரோடு பயணிக்க தயாராகும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தற்போதைய கட்சி அரசியலில் பாரம்பரிய முறைகள் மூலம் இனிமேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறி கொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியல் வெற்றி
அங்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதன் மூலம் அரசியல் வெற்றியடைய முடியும் என சில தரப்பினர் எதிர்பார்த்த போதிலும், பாரம்பரிய அரசியல் முறைகள் மூலம் மட்டுமே அத்தகைய வெற்றியை அடைய முடியாது என சுட்டிக்காட்டினார்.
அரசியல் வெற்றிகளை நோக்கிச் செல்லும்போது புதிய தலைமுறையினரின் பங்கேற்பு அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, அதற்காக 'Gen Z' மற்றும் 'மிலேனியல்' (Millennial) இளைஞர் தலைமுறையினரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்படி, பாரம்பரிய அரசியல் முறைகளிலிருந்து விலகி, முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் எதிர்கால அரசியல் வெற்றிகளை அடைய முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.