இலங்கை தொடர்பில் மாலைதீவின் நிலைப்பாடு
இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு ஐநா கூட்டத்தொடரில் மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜெனீவாவில் இந்த வேண்டுகோளை மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் (Asim Ahmed) விடுத்துள்ளார்.
நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சவால்களை அதன் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெற்றிகொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு தமது நாடு எப்போதும் ஆதரவளித்து வருவதாக அவர் சபையின் அமர்வின்போது குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் துறையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை தாங்கள் சாதகமாக கவனத்தில் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகள்
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.
எனவே இலங்கையின் அபிலாஷைகளை நனவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், அத்துடன் மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தமது நாடு தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்றும் அசிம் அஹமட் (Asim Ahmed) குறிப்பிட்டார்.