செம்மொழித் தமிழுக்கு சர்வதேச மேடை ; கனடாவில் பெரும் தமிழ் ஆய்வு மாநாடு
‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு எதிர்வரும் 2026 அக்டோபர் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கனடாவின் ரொரண்டோ நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பேராசிரியர்கள் முனைவர் அ. சண்முகதாஸ், முனைவர் கி. விசாகரூபன், முனைவர் போல் ரொகான் மற்றும் திருமதி விஜிதா திவாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாநாடு குறித்த விபரங்களை வெளியிட்டனர்.

அவர்கள் தெரிவிக்கையில், உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப்பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல் மற்றும் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் இணைப்புகளை ஆராயும் தளமாக இந்த மாநாடு அமையவுள்ளதாக தெரிவித்தனர்.
தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மாநாட்டுக்காக தமிழும் செய்யறிவும், மெய்ப்பொருளியலும் பண்பாடும், பொருளாதார சிந்தனையும் வாழ்வியலும், தமிழர் வரலாறும், வடக்கு–கிழக்கு பொருளாதார மேம்பாடும் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
ஆய்வுக் கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கலாம்.
250–300 சொற்களில் ஆய்வுச் சுருக்கம் ஜூன் 25ஆம் திகதிக்கு முன் அனுப்பப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூன் 30ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படுவர்.
தேர்வு செய்யப்படுவோர் 3,000 சொற்களுக்கு மிகாமல் முழுமையான கட்டுரைகளை ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படும் கட்டுரையாளர்களுக்கு கனடாவுக்கு விமானப் பயணச் சீட்டு மற்றும் தங்குமிட வசதிகள் மாநாட்டு ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விபரங்களுக்கு www.GlobalTamilConference.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.