சாலையில் ஆபத்தான முறையில் உந்துருளி சாகசத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது
மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் கவனயீனமாக ஈடுபட்ட 22 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இளைஞர் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்பு கொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 22 பேரும் கடுவலைப் பகுதிக்கு வெளியே வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இலங்கையில் பதிவு செய்யப்படாத இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மே 5ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.