விவசாயத்தில் களமிறங்கிய மஹிந்த!
விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அகுனகொலபலஸ்ஸிலுள்ள தனது இல்லத்தில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் பயிரிட்டிருந்த மரக்கறிகளை அறுவடை செய்திருந்தார்.
கத்தரிக்காய், முள்ளங்கி, முட்டைக்கோஸ், நோகோல், மிளகாய், குடமிளகாய், தக்காளி, பசலைக்கீரை, பாக்கு போன்றவற்றை அவர் பயிரிட்டிருந்தார், மேட்டு நிலம், தாழ்நிலம் மற்றும் வறண்ட பிரதேசங்களில் விளையும் அனைத்து காய்கறிகளும் அமைச்சரால் பயிரிடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர “எங்களுக்கு தேவையான அரிசியை எனது சொந்த வயலில் இருந்து பெற்றுக்கொள்கிறேன்.
காய்கறிகளையும் பயிரிட்டுள்ளேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கும் சிறிய இடத்தில் கூட ஒன்றிரண்டு பயிர்களை வளர்க்கலாம். நச்சு இல்லாத இயற்கை விவசாயத்தை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்.
அதன் மூலம் நாம் பல நன்மைகளை அனுபவிக்க முடியும். விவசாய அமைச்சகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் தோட்டத்தில் ஏதேனும் ஒரு பயிர் வளர்க்க வேண்டும்.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.