மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மஹிந்த
மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு விரைவில் தீர்வு காணப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலைகளால் எதிர்காலத்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் இரசாயன உரங்களை வழங்குவதன் மூலமே மரக்கறி தட்டுப்பாட்டைத் தடுக்க முடியும் எனவும் அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளது.
எனினும், சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மே மாதத்தில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.
எனவே, மரக்கறிச் செய்கையாளர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு விரைவில் தீர்வு காண்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.