மஹேல ஜயவர்தனவுக்கு புதிய பொறுப்பு!
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் இயக்குநராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் அனுபவமிக்க பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த புதிய பொறுப்பில் அணியின் ஒட்டுமொத்த கிரிக்கெட் செயல்பாடுகள், போட்டி வியூகங்கள், திறமையான வீராங்கனைகளைத் தேர்வு செய்தல் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை அவர் கவனிக்கவுள்ளார்.
இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய மஹேலா ஜயவர்தன, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அந்த அணி ஐபிஎல் கிண்ணங்களை வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான அவரது பயிற்சி பயணம் 2026 ஐபிஎல் தொடருக்கு பின்னர் நிறைவடைந்த நிலையில், தற்போது டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியின் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். இதன் மூலம் தனது நீண்டகால கிரிக்கெட் அனுபவத்தை மகளிர் கிரிக்கெட்டிலும் மஹேல ஜயவர்தன பயன்படுத்தவுள்ளார்.