எரிபொருள் பெற சென்ற கணவர் மாயம்; மனைவி பொலிஸில் புகார்!
அம்பலாங்கொட - கஹவே பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக வாகனத்துடன் வீட்டிலிருந்து சென்ற கணவனை 4 நாட்களாக காணவில்லை என மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அத்துடன் அவரது கையடக்க தொலைபேசியும் செயலிழந்துள்ளதாக மனைவி முறைப்பாட்டில் கூறியுள்ளார். இந்நிலையில் அவரது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்திய போதும் தொடர்புக்கொள்ள முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மனைவி கொடுத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எரிபொருள் இல்லாது மலர்ச்சாலையின் நாளாந்த பணிகளை செய்ய முடியாது என்பதால், எனது கணவர் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்று எரிபொருள் இல்லை எனக் கூறி வீடு திரும்பி இருந்தார். வீடு திரும்பிய எனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், எரிபொருளை பெற்றுக்கொள்ள வருமாறு கூறினார்.
இதனையடுத்து கணவர் எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை எனவும் மனைவி கூறியுள்ளார் . அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்து.
அதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்ள வருமாறு கூறியது யார்? என்பது இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டை விட்டு சென்றதில் இருந்து அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இதுவரை வீடு திரும்பவில்லை என்பது மர்மமாக இருப்பதாகவும் மனைவி, தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வீடு திரும்பாத மலர்ச்சாலையின் உரிமையாளர் குற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பான எவ்வித முறைப்பாடுகளும் இல்லை எனவும் அவருக்கு எதிரிகள் இருந்தனர் என்பதற்கான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.