யாழ் மாநகரசபை முதல்வர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
யாழ் மாநகரசபையில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற யாழ் மாநகரசபை அமர்வில் இந்த விடயம் பேசுபொருளான நிலையில், இன்று இது குறித்து முதல்வர் வி.மணிவண்ணன் பதிலளிக்கவில்லை.
யாழ் மாநகரசபையின் தற்காலிக ஊழியர்களாக மூவர் இணைக்கப்பட்டு, மின்சார பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை இணைப்பதில் எந்த நிர்வாக நடைமுறையும் பின்பற்றப்படவில்லையென மாநகரசபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் சபை அனுமதி இல்லாமல், கேள்வி கோரல் மேற்கொள்ளாமல் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ந்யமனம் பெற்றவர்களில் இருவர் யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கவில்லை என்பதுடன் அவர்கள் நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் வசிப்பதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
யாழ் மாநகரசபை ஈ.பி.டி.பி பெண் உறுப்பினர் ஒருவரின் மகன், மணிவண்ணன் அணியை சேர்ந்த நல்லூர் பிரதேசசபையின் பெண் உறுப்பினரின் மகன், கொக்குவிலை சேர்ந்த இளைஞன் ஆகியோரே, மாநகர முதல்வரினால் தன்னிச்சையாக- உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் இன்று சர்ச்சையானதையடுத்து, யாழ் மாநகர ஆணையாளர் தெளிவான பதிலளிக்க முடியாமல் திண்டாடினார்.
அவர்களின் நியமனத்திற்கு தான் அங்கீகாரம் வழங்கவில்லையென முதலில் கூறியவர், பின்னர், அங்கீகாரம் வழங்கியதாக ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் அந்த நியமனங்கள் சட்டவிரோதமானவை என கணக்காய்வு திணைக்களம் பரிசோதித்தால் அதற்கு ஆணையாளரே முழுமையான பொறுப்பேற்க வேண்டுமென சபையில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து அடுதத சபை அமர்வில் விளக்கமளிக்கவுள்ளதாக முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றத்து.