பூனையைக் காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கேகாலை -வறகாப்பொல, அல்கம பகுதியில் வளர்ப்புப் பூனையைக் காப்பாற்ற முயன்ற இளம் பெண் ஒருவர் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி
வீட்டின் பின்புறத்தில் பூனைகள் உரத்த சத்தமிடுவதைக் கேட்டுச் சென்று பார்த்தபோதே, தனது வளர்ப்புப் பூனைகளில் ஒன்று கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதை அவர் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனது தந்தையுடன் கிணற்றடிக்குச் சென்ற அவர், கைப்பேசியின் ஒளிவிளக்கைச் (Torch) ஒளிரச்செய்து பூனை இருக்கும் இடத்தைக் காட்டியுள்ளார்.
கயிற்றில் கட்டப்பட்ட வாளி ஒன்றைப் பயன்படுத்தி பூனையை மேலே மீட்க தந்தை தயாராகிக்கொண்டிருந்த வேளையில், வெளிச்சம் காட்டுவதற்காக அந்தப் பெண் கிணற்றை நோக்கி எட்டிப் பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அவர் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார். அவ்வாறு வீழ்ந்தபோது கிணற்றின் கொங்கிரீட் பகுதியில் தலை பலமாக மோதியதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பின்னர், உறவினர் ஒருவரின் உதவியுடன் அவர் கிணற்றிலிருந்து வெளியே தூக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.