பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (18) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
ருஹுண பல்கலைக்கழகத்தைத் தவிர ஏனைய அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்த பணிப்புறக்கணிப்பு செயற்படுத்தப்பட்டு வருவதாக அதன் இணைத் தலைவர் தம்மிக எஸ். பிரியந்த தெரிவித்தார்.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போதைய அரசாங்கம் தமது கன்னி வரவு செலவு அறிக்கையிலேயே பல்கலைக்கழக முறைமைக்கு பாரிய அநீதியிழைத்தது.
அது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, பிரதமரும், பிரதி நிதி அமைச்சரும் இந்த வரவு செலவு திட்டத்தில் அவற்றை நிவர்த்தி செய்வதாக தெளிவான உடன்பாட்டுக்கு வந்தனர். ஆனால் 2027 வரவு செலவு திட்டத்தில் அவை நிவர்த்தி செய்யப்படவில்லை, மாறாக மேலும் பிரச்சினைகளே உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அரசாங்கத்துக்கு எதிராக இன்று ஒரு அடையாள பணிப்புறக்கணிப்புடன் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
ருஹுணு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதால், அந்த பல்கலைக்கழகம் மட்டும் இப்போராட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இந்த பணிப்புறக்கணிப்பில் இணைந்து கொண்டுள்ளன.
அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் அவற்றுக்கு முன்னால் போராட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
எனவே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணத் தலையிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். மேலும், தற்போதைய ஜனாதிபதியுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களைக் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அந்தக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை" என அவர் மேலும் குறிப்பிட்டார்.