வெளிநாட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா நிதி வசூல் செய்தாரா?
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தமை பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்ததை தொடர்ந்து பிரபாகரன் தொடர்பில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வலம் வருகின்றன.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்தார் என தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
நிதி சேகரிப்பில் மதிவதினி, துவாரகா
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா இருவரும் ஜெர்மனியில் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் மதிவதினி, துவாரகா இருவரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஒரு அரசியல் இயக்கம் தொடங்கப்படக் கூடும் எனவும் தகவல்கள் பரவின.
இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்றும், விடுதலைப் புலிகள் பெயரை வைத்து அரசியல் சதித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறதாகவும் பல்வேறு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் டெலோ தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்[பில் கூறுகையில், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பே ஒரு நிதி சேகரிப்புக்கான நடவடிக்கைதான் என தெரிவித்த அவர் , சுவிட்சர்லாந்தில் இப்படி ஒரு நிதிசேகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து லண்டனுக்கு அவர்கள் அழைத்துசெல்லப்பட்ட நிலையில் துவாரகா என கூறப்பட்டவர் பிரபாகரன் மகள் துவாரகா இல்லை என்பது அம்பலமானதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு இனத்துக்காக குடும்பத்தையே அர்ப்பணித்தவர் தம்பி பிரபாகரன். அவரை இவ்வாறு இழிவுபடுத்துவது சரியானது அல்ல என தெரிவித்த சித்தார்த்தன் ஆகையால் இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும் கூறினார்.