எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டிய கல்வி, இளைஞர்களை சிதைக்கிறதா?
இலங்கையின் கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மாணவர்களின் மனதைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதன் மூலம் கல்வியில் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளை மூடிமறைக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 'மூச்சு' திட்டத்தின் கீழ், கொலன்ன ஆதார மருத்துவமனைக்கு 28 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று நாட்டின் பிரதான பேசுபொருளாக கல்வி மாறியுள்ளது. கல்வி அமைச்சுப் பொறுப்பிலுள்ளவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அல்லது அவர்களின் தனிப்பட்ட நடத்தை குறித்து விமர்சிப்பது எமது நோக்கமல்ல.
220 இலட்சம் மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றவர்களுக்கு அவசியமற்றது. ஆனால், இன்று தனிப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி, கல்வியில் எழுந்துள்ள பாரிய நெருக்கடிகளைச் சில தரப்பினர் திட்டமிட்டு மறைக்க முற்படுகின்றனர்.
முறையான கலந்துரையாடல்களின்றி, வெறும் 'PowerPoint' காட்சிப்படுத்தல்கள் மூலம் முன்னெடுக்கப்படும் இந்தச் சீர்திருத்தங்கள், 41 இலட்சம் மாணவர்களின் சிந்தனையைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லும் வகையில் அமைந்துள்ளன.

கல்வித்துறையில் ஆபாசக் கருத்துக்கள் உள்வாங்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இங்கிலாந்து முறைமை அல்லது STEAM கல்வி மற்றும் எமது வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கிய சமநிலையான சீர்திருத்தங்களையே நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்தக் கல்வி விபரீதத்திற்குப் பொறுப்பானவர்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். வெறும் அதிகாரிகள் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு அரசாங்கமும், கல்வி அமைச்சரும் தப்பித்துக்கொள்ள முடியாது.
கல்விச் சீர்திருத்தத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி மறைந்துள்ளது. இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.