அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் படிப்படியாக குறைவடையும் என்று வளிமண்டவிலயல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது சுமார் 75 மி.மீ வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

அறிவுறுத்தல்
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதனால் தொடர்ந்தும் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்படையினருக்கும், மீனவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொடரும் மழையின் காரணமாக களு கங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வள கங்கை போன்ற பிரதான நதிகள் தொடர்ந்தும் சிறு வெள்ள மட்டத்திலேயே காணப்படுவதுடன், களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கை பெருக்கெடுத்தமையால் பத்தேகம பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகரித்து வரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகப் பொல்கொல்ல அணையின் மூன்று வான் கதவுகள் 33 அங்குல அளவுக்குத் திறக்கப்பட்டு நீரும் விக்டோரியா நீர்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருவதுடன், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.