தேநீர் குடிக்க இறங்கியவர்களுக்கு எமனான லொறி ; இருவரும் பலி
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் திம்புள்ள பத்தனை சந்தி பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லிந்துலை கௌலினா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் மற்றும் பெய்திலியை சேர்ந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது டயகம பிரதேசத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தேநீர் குடிப்பதற்காக பத்தனை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் தேநீர் குடிப்பதற்காக பேருந்திலிருந்து இறங்கி சென்ற இருவர் மீது வேகமாக எதிர் திசையிலிருந்து பயணித்த லொறியொன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நாத்தாண்டிய பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.