இறைவரித் திணைக்களத்தில் நீண்ட வரிசை ; இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை அந்த இலக்கத்தைப் பெறாத பெருந்திரளான மக்கள் இன்று (02) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும் பிராந்திய அலுவலகங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இணையத்தளம்
அத்துடன், TIN இலக்கத்தைப் பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையம் வழியே விண்ணப்பிக்க முயன்றதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் தடங்கல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, பராமரிப்புப் பணிகளுக்காக அந்த இணையத்தளம் தற்காலிகமாகச் முடக்கப்பட்டிருந்தது.
வங்கி கணக்கு திறத்தல், வாகனம் பதிவு செய்தல், வருமான உரிமத்தைப் புதுப்பித்தல் மற்றும் வணிகத்தைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கு நவம்பர் 01 ஆம் திகதி முதல் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தீர்மானத்தைத் தொடர்ந்து TIN இலக்கத்தைப் பெற பெருந்திரளான மக்கள் வருகை தருவது குறித்து கருத்துத் தெரிவித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான நந்தன குமார, தேவை ஏற்படுபவர்கள் மட்டுமே TIN இலக்கத்தைப் பெறுவதற்கு உரிய அலுவலகங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.