மட்டக்களப்பில் களமிறங்கும் 06 கட்சிகளும் 09 சுயேட்சைக்குழுக்களும்
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்திவருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 06 கட்சிகளும் 09 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் 30 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேர்தல் அலுவலகம்
மட்டக்களப்பு நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று (12) அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11உள்ளுராட்சிமன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக பிரசாந்தன் தெரிவித்தார்.
இதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் தயானந்தன் தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மண்முனைப்பற்று,மண்முனை மேற்கு பிரதேச சபைகளுக்கு போட்டியிடுவதற்காக இந்த கட்டுப்பணம் இன்று காலை செலுத்தப்பட்டது.