அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு
லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 745 ரூபாவால் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, முன்னர் 6,740 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 2,720 ரூபாவிலிருந்து 2,398 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சவூதி அராம்கோவின் விலை மாற்றங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் உள்ளிட்ட இறக்குமதிச் செலவுகள் அதிகரித்திருந்த போதிலும், கடந்த மூன்று மாதங்களாக விலைத் திருத்தம் மேற்கொள்ளாமல் ஏற்பட்ட நட்டத்தை நிறுவனமே ஏற்று வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தொடர்ச்சியான நட்டம் காரணமாக கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 6,740 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,988 ரூபாவிலிருந்து 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 2,720 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு நேற்று (16) நுகர்வோர் விவகார அதிகாரசபை லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளை அழைத்திருந்தது.
இதன்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அதிகரிக்கப்பட்ட எரிவாயு விலையைக் குறைப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிவிப்பதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கூடிய நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, தற்போது எரிவாயு விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.