ஷிரான் பாசிக்குடன் தொடர்பு ; 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை; கிலியில் பலர்!
துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, கோடிக்கணக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாசிக் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்
விசாரணைக்குட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இரு அமைச்சர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகளும் இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது அவ்வப்போது ஷிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த முக்கிய அமைச்சரொருவர், ஷிரான் பாசிக்குக்கு அனுமதியற்ற முறையில் காணிகளை நிரப்பி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த நடவடிக்கைகளுக்காக முன்னாள் அமைச்சர், ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருமளவு பணத்தைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஷிரான் பாசிக் நீண்ட காலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவிக்கையில், ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.