மன்னார் வைத்தியசாலை வைத்தியருக்கு உயிர் அச்சுறுத்தல்: சுகாதார அமைச்சுக்கு சென்ற கடிதம்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய், சிசு உயிரிழந்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது அம்மாவட்டத்தின் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா இடமாற்றம் கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தனக்கு உயர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா இந்த கடிதத்தை கையளித்துள்ளார்.
அக் கடிதத்தில குறிப்பிட்டுள்ளதாவது,
மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தொடர்ந்து, ஒரு குழுவினர் பிரசவ அறையில் நுழைந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிலைமைய சமாளிக்க பொலிஸாரை நாடியபோதும், தனிப்பட்டமுறையில் தன்னை குறிவைத்து தாக்கியதாகவும் தன்னை கொலையாளி என அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சில தரப்பினர் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே தனக்கு இடமாற்றம் வேண்டும் எனக் கூறி வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா கடிதத்தை கையளித்துள்ளார்.