இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் தொழுநோய் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோய் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் சுமார் 10 சதவீதமானோர் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி 25 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில், சுகாதார அமைச்சின் தொழுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் யசோமா வீரசேகர முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 123 பேர் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களாவர். புதிய மற்றும் மீண்டும் நோய் பாதிப்புக்குள்ளானவர்களில் சுமார் 8 சதவீதமானோர், சிகிச்சையை நாடும் போதே ஊனமுற்ற நிலையில் உள்ளனர்.

ஆரம்ப நிலையிலேயே நோயாளர்களைக் கண்டறியவும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதிக்கவும் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் தொழுநோயாளிகளுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் கிளினிக்கின் தோல் விசேட மருத்துவ நிபுணர் சத்துராரிய சிறிவர்தன இது குறித்து மேலும் விளக்குகையில், தொழுநோய் என்பது ஒரு தொற்றுநோய் அல்ல. பாக்டீரியா உடலுக்குள் நுழைந்த பிறகு நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நோய் முதன்மையாகத் தோலைப் பாதித்தாலும், முற்றிய நிலையில் கண்கள் மற்றும் மூக்கு போன்ற ஏனைய உறுப்புகளையும் பாதிக்கலாம். சிகிச்சை பெறாத நோயாளி இருமும் போது அல்லது தும்மும் போது வெளியேறும் பாக்டீரியாக்களை மற்றவர்கள் சுவாசிப்பதன் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
இலங்கையின் மக்கள் தொகையில் சுமார் 95 சதவீதமானோருக்கு இந்த பாக்டீரியாவுக்கு எதிரான இயற்கை எதிர்ப்பு சக்தி உள்ளது. எஞ்சிய 5 சதவீதமானோருக்கே நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருப்பின் பயம் அல்லது தயக்கமின்றி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரிகளை அணுகுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.