விடுதலைப்புலிகளின் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரின் இறுதி ஆசை!
விடுதலைப் புலிகளின் அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த ஜோர்ஜ் மாஸ்டர் என அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்தினம் அவர்கள் கோப்பாயிலுள்ள தனியார் முதியோர் இல்லமொன்றில் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் அவரது ஆசைப்படி முல்லைத்தீவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் கோப்பாயிலுள்ள தனியார் முதியோர் இல்லமொன்றில் தனது இறுதிக்காலத்தில் தங்கியிருந்த அவர், அங்கு தனது 85 ஆவது வயதில் காலமானார்.
அஞ்சல் அதிபராக பணியாற்றிய அவர், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 1990களின் நடுப்பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார். இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு துறைகளில் பல மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரிந்து வந்த போதும், அரசியல்துறையில் பணியாற்றிய ஜோர்ஜ், தயா போன்றவர்கள் சமாதான பேச்சு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரவலாக அறியப்பட்டனர்.
பின்னர் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த ஜோர்ஸ் மாஸ்டர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவர் மீதான அனைத்து வழக்குகளில் இருந்தும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் 2016 ஜூலை மாதம் கொழும்பு தலைமை நீதிவானால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் கடந்த சில வருடங்களாக கோப்பாயிலுள்ள தனியார் முதியோர் இல்லத்தில் தனது இறுதிக்காலத்தை அவர் கழித்து வந்த நிலையில் நேற்று (5) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் தான் உயிரிழந்த பின்னர் உடலை புதைப்பது தொடர்பான இறுதி விருப்பத்தை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்படி 2008ஆம் ஆண்டு ஆழஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது நண்பரான அருட்திரு கருணாரட்ணம் அடிகளாரில் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டுமென அவர் விரும்பியிருந்தார்.
அவரது விருப்பத்தின்படி , முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தில் ஜோர்ஜ் மாஸ்டரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
ஜோர்ஜ் மாஸ்டரின் மறைவானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனைய ஏற்படுத்தியுள்ள அதேவேளை நோர்வேயின் முன்னாள் சமாதானத் துதுவரான எரிக் சொல்ஹெய்மும் , ஜோர்ஜ் மாஸ்டரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://jvpnews.com/article/ltte-translator-george-master-passes-away-1630843653