மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் பெருமளவு போதைப்பொருள்மீட்பு
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது, 67.53 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையினை இலங்கைச் சுங்கப் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாடுகள் பலவற்றில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 11 வெளிநாட்டுத் தபால் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தப் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள்
கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் தபால் பொருட்களைப் பரிசோதித்தபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் இந்தச் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
பின்னர் உரிய முகவரிகளின் உரிமையாளர்கள் வந்து அதைப் பெற்றுக்கொள்ளும் வரை அவற்றைத் தடுத்து வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு யாரும் வராத காரணத்தினால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் முன்னிலையில் அவற்றைத் திறந்து பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதற்கமைய, இன்று (19) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மத்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த 11 பொதிகளையும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தே இந்தப் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.