பதவி விலகினார் லங்கா சுகர் நிறுவனத் தலைவி
அரசியல் அழுத்தங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கோரிக்கைகள் காரணமாக, லங்கா சுகர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார்.
தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் அவர் சமர்ப்பித்துள்ள இராஜினாமா கடிதத்தில், நல்லாட்சி மற்றும் நிறுவனத்தின் நேர்மைத் தன்மையைப் பேணித் தனது கடமைகளைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவிக்காலத்தில், அரசாங்க சுற்றுநிருபங்கள், விதிமுறைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை மீறிச் செயற்படுமாறு சில கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறுவனத்திற்கு விடுக்கப்பட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத கோரிக்கைகளுக்குத் தானும், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் இணங்காததால், சில மாகாண அரசியல்வாதிகளுடன் தொடர்ந்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் ஒரு அரச நிறுவனமாக, பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் கடுமையான நிதி மற்றும் ஒழுங்குமுறைப்பாடுகளுக்கு உட்பட்டே லங்கா சுகர் இயங்க வேண்டியுள்ளது.
சட்ட ரீதியான வரம்புகளை அரசியல்வாதிகளுக்குத் தெளிவுபடுத்த முயன்ற போதிலும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என அவர் சாடியுள்ளார்.