பதுளை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு அபாயம் ; விடுக்கப்பட எச்சரிக்கை
பதுளை - சொரணாத்தோட்டை மத்திய கல்லூரிக்கு அருகில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாடசாலையின் ஆபத்திலுள்ள இரண்டு மாடி கட்டிடத்தை தடைசெய்யப்பட்ட பகுதியாக மாற்றவும், மற்றைய கட்டிடங்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை
அத்துடன், பாடசாலையின் மைதானத்தின் ஒரு பகுதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தப் பகுதியை ஒரு சரியான அணைக்கட்டு கட்டப்பட்டு நிலைப்படுத்தப்படும் வரை தற்காலிகமாக மூட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் மனோகரி பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அணையை நிர்மாணிப்பதற்காக 05 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்தப் பணியை விரைவாக மேற்கொண்டு மாணவர்களின் கல்வியை எளிதாக்குமாறு பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.