விரைவில் யாழ் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு
யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை இன்று (26) பார்வையிட்டார்.
இதன்பின்னர் பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான கூட்டம் ஒன்று இன்று காலை இடம் பெற்றது.

காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை....
இராணுவ முகாம்கள் அமைந்துள்ள மக்களின் காணிகளுக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்ந்தனர்.

இராணுவத்தின் படைத் தளங்கள் அமைந்துள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தின் ஒவ்வொரு இடங்களையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பலாலி இராணுவ கட்டளை தளபதி இலங்கை இராணுவ தளபதி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்