குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கான படகு சேவைகள் பாதிப்பு ; மக்கள் பெரும் அவதி
யாழ்ப்பாணம், குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
குறிகட்டுவான் - நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய படகுகள் ஏற்கனவே பழுதடைந்திருந்த நிலையில், ‘குமுதினி’ படகு மட்டுமே சேவையில் ஈடுபட்டு வந்தது.

இயந்திரக் கோளா
இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 60 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி படகு, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்தது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், தமது படகில் சென்று குமுதினியில் இருந்த பயணிகளை மீட்டு, மீண்டும் குறிகட்டுவான் பகுதிக்கு அழைத்து வந்தனர்.
குமுதினி படகு பழுதடைந்தமையையும், நெடுந்தீவு நோக்கிப் பயணிக்கவிருந்தவர்கள் குறிகட்டுவானுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டமையையும் அறிந்த நெடுந்தீவு மக்கள், "கரிகாலன்" எனும் தனியார் படகை குறிகட்டுவானுக்கு அனுப்பி வைத்தனர். அப்படகு அங்கிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் நெடுந்தீவைச் சென்றடைந்தது.
அதேவேளை, பழுதடைந்த குமுதினி படகும் நெடுந்தீவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதனிடையே, இன்று காலை 7.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து "சத்சரா" எனும் தனியார் படகு குறிகட்டுவான் வந்தடைந்தது.
மீண்டும் காலை 8.30 மணிக்கு அப் படகு நெடுந்தீவு நோக்கிப் பயணிக்கத் தயாரான போது, அரச உத்தியோகத்தர்கள், சுற்றுலாப் பயணிகள், பிரதேச மக்கள் எனப் ஏராளமானோர் ஏறுவதற்கு முற்பட்டதால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
பின்னர், பலத்த சிரமங்களுக்கு மத்தியிலேயே பயணிகள் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிகட்டுவானில் இருந்து சுமார் ஒரு மணி நேரப் படகுப் பயணத்தின் பின்னரே நெடுந்தீவை அடைய முடியும்.
இவ்வாறான நீண்ட தூரப் பயணத்தின் போது படகுகள் அடிக்கடி பழுதடைவதாலும், படகுச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்களினாலும் நெடுந்தீவு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அப்பகுதிக்கான சுற்றுலாத் துறையும் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.