77% வாக்கு எண்ணிக்கை நிறைவு; இஸ்ரேலில் முடிவுக்கு வரும் நெதன்யாகு அதிகாரம்!
இஸ்ரேலிய பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று (அக். 28) வெளியாகும் நிலையில், 77 சதவிகித வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, தற்போது வரை 77 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக, இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தப்பாத கருத்து கணிப்பு
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் கூட்டணி 54 இடங்களிலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அரபு கட்சிகள் 17 இடங்களில் முன்னிலையில் இருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இறுதியில், அரபு கட்சிகள் 18 இடங்களைக் கைப்பற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலிய சட்டத்தின்படி, அரசு அமைப்பதற்கு 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 61 இடங்களைப் பெறுவது கட்டாயம் என்பதால், முடிவுகள் வெளியான பிறகு நெதன்யாகு மற்றும் ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.
இதில், இஸ்ரேலியர்கள் இடையே நெதன்யாகு அரசின் நடவடிக்கைகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால், அரபு கட்சிகளின் ஆதரவுடன் இஸ்ரேலில் ஐசென்கோட் புதிய பிரதமராக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், தேர்தலின் வாக்குப் பதிவுக்குப் பிறகு வெளியான கருத்துக் கணிப்புகளில் நெதன்யாகு மற்றும் ஐசென்கோட் ஆகிய இருவரின் கூட்டணிகளும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற மாட்டார்கள் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.