விமானத் தபால் பார்சலில் பெரும் தொகை போதைப்பொருட்கள்; ஷாக்கில் அதிகாரிகள்!
விமானத் தபால் பார்சல் சேவை ஊடாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்டிருந்த பார்சல்களில் 6 கோடியே 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்து- ஸ்பெயின்- ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுள்ள போலி முகவரிகளுக்கு 'குஷ்' 'ஹஷீஷ்' 'கொக்கேய்ன்' மற்றும் 'எக்ஸ்டசி' ஆகிய போதைப்பொருட்கள் 9 பார்சல்களில் பொதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தன.

போலி முகவரிகள்
இந்தப் பார்சல்களைப் பொறுப்பேற்பதற்கு எவரும் வராத நிலையில்- முகவரிகள் குறித்து ஆராய்ந்தபோது அவை போலி முகவரிகள் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று (28) பிற்பகல் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய தபால் பரிவர்த்தனை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அவை திறக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன.
இதனையடுத்து சுங்கத் திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் தொகுதி மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.