பொலிஸாருக்கு நீண்ட நாளாக போக்கு காட்டிய கொம்பனித்தெரு குடு நோனா கைது!
நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்த ‘கொம்பனித்தெரு குடு நோனா’ என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செட்டிக்குளம் பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் போதைப்பொருளை ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே சந்தேகநபர் ஹெரோயின் மற்றும் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்த நோனா
கைது செய்யப்பட்டபோது, விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த 50 கிராம் ஹெரோயினும், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் 48,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொம்பன்னவீதி மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் முன்னர் வசித்து வந்த சந்தேகநபர், கடந்த காலத்திலும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
முன்னதாக, 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
நீண்ட காலமாக பொலிஸாரிடம் இருந்து தப்பித்து வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர் தொடர்பிலும், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணம், சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பிலும் கிரிபத்கொட பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அண்மையில் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘சுட்டி உக்குங்’ என்பவரின் சிறிய தாய் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது கணவரான ‘கூம்பிகெலே சுட்டி’, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.