காணி உரிமையை பெற்றுக்கொள்வதற்காக செய்யப்பட்ட கொலை
நுவரெலியா - மீபிலிமான பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் ராகல நேற்று (09.09.2023) காலை வேளையில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இந்த வீட்டின் உரிமையாளரின் தாயாரிடம் சாரதியாக பணிபுரிந்ததாகவும், தாய் உயிரிழப்பதற்கு முன்னர் அவரின் இறுதி ஆசையாக காணியின் உரிமையை குறித்த சந்தேகநபரின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் கூறி வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் சிறிது காலமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, சந்தேக நபர் வீட்டுக்கு வந்து வீட்டில் இருந்த பெண்ணையும் உறவினர் ஒருவரையும் நேற்றைய தினம் (09.09.2023) கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது 50 வயதுடைய உறவினர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளரான 41 வயதுடைய பெண் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார். குறித்தப் பெண் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தகவலறியப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.