நீரில் மூழ்கிய கிளிநொச்சி A-35 நெடுஞ்சாலை ; மீட்பு பணிகளில் ஈடுபடாத அரசு
கிளிநொச்சி முதல் புதுக்குடியிருப்பு வரை பரவலான வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களை மீட்க பொறுப்பான அரச நிர்வாகமும், பாதுகாப்புத்துறையும் இதுவரை செயல்படாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
A-35 நெடுஞ்சாலையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பேருந்துகள் உள்ளிட்ட சில வாகனங்கள் மட்டுமே கடும் ஆபத்துடன் பயணிக்கின்றன.
மாணிக்கப்பிள்ளையார் கோவிலடி, மூங்கிலாறு, கைவேலி மஞ்சள் பாலம் என பல முக்கிய இடங்களில் வீதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன.
புதுக்குடியிருப்பு நகரம் முழுவதும் வெள்ளம் தேங்கியுள்ளதோடு, சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலைக்கு அருகிலுள்ள வீதிப் பாலம் உடைந்து காணப்படுவது அப்பகுதி மக்கள் பாதுகாப்பில் பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. நகரின் பல பகுதிகள் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளன.

இருட்டுமடு, குரவில், ஆனந்தபுரம், மந்துவில் உள்ளிட்ட கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தால் சூழப்பட்டு அணுக முடியாத நிலையிலுள்ளன. வட்டுவாகல் கரையிலிருந்து எதிர் கரை வரை நீர் மட்டம் சமமாக உயர்ந்துள்ளதால் அப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு வழியாக கள்ளியடிப் பகுதி வரை பல கிலோமீற்றர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அந்தப் பாதை முற்றாக முடங்கியுள்ளது.
மாங்குளம் – ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்பு பாதையும் பல இடங்களில் வெள்ளம் வீதியை மூடியதால் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
முள்ளியவளை – மாங்குளம் – தண்ணீரூற்று – நெடுங்கேணி பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அம்பலவன்பொக்கணை, மாத்தளன் பகுதிகளில் மக்கள் பெருங்கடலும் சிறுகடலும் இடையில் சிக்கிய நிலையில், இரணைப்பாலையிலிருந்து வந்த பொதுமக்கள் படகுகள் மூலம் தன்னார்வமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெருங்கடலில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் உள்ளக நீர் கடலுக்கு செல்ல தாமதமாவதும் இதை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனால் சிறுகடலில் நீர் அளவு வேகமாக உயரும் நிலையில், அம்பலவன் பொக்கணை, மாத்தளன், ஆனந்தபுரம், மந்துவில், இரணைப்பாலையின் சில பகுதிகளில் மக்கள் கடும் அவலத்தில் தத்தளித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் செயலிழந்துள்ளதால், அரச மீட்பு நடவடிக்கைகள் தொடங்குமே இல்லை. மக்கள் தாமே மக்களைக் காப்பாற்றும் நிலையில் கடுமையான சிக்கலில் உள்ளனர்.
பெரிய காணிகளில் தனித்தனியாக வசிக்கும் மக்கள் தொடர்பு இல்லாமல் ஆபத்தில் சிக்கியிருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அங்குள்ளவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.