நிலுவையில் 4,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் ; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
பொலிஸ் விசாரணைகள், மருத்துவ-தடயவியல் பரிசோதனைகள் மற்றும் சிறுவர் தொடர்பிலான நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களுக்கு மத்தியில், இலங்கை முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 4,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கப் பிரிவுப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான சஜீவனி அபேகோன், அதிகாரசபைக்கு ஆண்டதோறும் 10,000 முதல் 12,000 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், அதில் குற்றவியல் நடத்தைகள் அடங்கிய முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முறைப்பாடுகள்
அதிகாரசபைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், நீண்டகாலமாக நிலவும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய உளச்சமூக ஆதரவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, சில வழக்குகள் தரவுத்தளத்தில் நிர்வாக ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்படாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளன எவ்வாறாயினும், இது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இதன் அர்த்தமல்ல.
பெறப்பட்ட ஒவ்வொரு முறைப்பாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை காரணமாகவே இந்த வழக்குகள் உத்தியோகபூர்வமாக முடிக்கப்பட்டு தரவுத்தளத்தில் இருந்து அகற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.
இருப்பினும், நிலுவையிலுள்ள முறைப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் அதிகாரசபை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாடுகளில் சுமார் 75 சதவீதமானவையும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை பெறப்பட்ட முறைப்பாடுகளில் 50 சதவீதமானவையும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான உளச்சமூக உதவி அல்லது கண்காணிப்பு தேவைப்படும் முறைப்பாடுகள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ள அதேவேளையில், சந்தேகத்திற்குரிய குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விடயங்கள் உரிய சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.