கேரளாவை சேர்ந்த தாதிக்கு யேமன் நீதிமன்றம் வழங்கிய கொடூர தண்டனை!
யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 33 வயதான நிமிஷ பிரியா என்பவர் யேர்மனில் செவிலியராக இருந்தார், கணவர் டாமி தாமஸுடன் யேமனில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதன்போது, யேமனைச் சேர்ந்த தலால் அப்து மஹதி என்பவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்தச் சூழலில் கடந்த 2014-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக தம்பதியினர் கேரளா திரும்பியுள்ளனர்.

அதன்பின்னர், கடந்த 201-ம் ஆண்டு செவிலியர் நிமிஷ பிரியா மட்டும் யேமனுக்கு வேலை விடயமாகச் சென்றுள்ளார். கணவர் டாமி, மார்ச் மாதம் செல்ல இருந்துள்ளார். ஆனால் அப்போது யேமனில் நடந்த போர் காரணமாக அவருக்கு விசா கிடைக்கவில்லை. அதனால் தனது குழந்தையுடன் இடுக்கியிலேயே தங்கி விட்டார்.
இதனிடையே யேமனில் சொந்தமாக கிளினிக் வைக்க நிமிஷ பிரியா நினைத்துள்ளார். அதனால் அந்நாட்டு விதிகளின்படி, யேமனைச் சேர்ந்த, தங்கள் குடும்பத்துடன் நன்கு பழகியவருமான தலால் அப்து மஹதியிடம் நிமிஷ பிரியா உதவி கேட்டுள்ளார்.
இதனை அடுத்து தலால் அப்து மஹதி அளித்த உதவியால் நிமிஷ பிரியா கிளினிக் வைத்துள்ளார். அந்த கிளினிக்கில் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிமிஷ பிரியாவை தலால் அப்து மஹதி வற்புறுத்தியுள்ளார்.

மேலும் கிளினிக்கில் வரும் வருமானத்தை தலால் மட்டுமே எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதனை அடுத்து நிமிஷ பிரியாவின் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொண்டு அவரை உடல் ரீதியாக தலால் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலும் கிளினிக்கில் இருந்த பணத்தையும், நிமிஷ பிரியாவின் நகைகளையும் தலால் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தலால் மீது பொலிஸில் நிமிஷ பிரியா முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து தலாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்ததும், நிமிஷ பிரியாவை முன்பை விட அதிகமாக துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, தன்னுடன் பணிபுரிந்த செவிலியர் ஹனானின் உதவியுடன் தலாலுக்கு மயக்க மருந்து செலுத்தி அவரைக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பிய நிமிஷ பிரியா, சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள வைத்தியசாலையில் செவிலியராக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நிமிஷ பிரியாவின் பழைய கிளினிக் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், தண்ணீர் தொட்டியில் கிடந்தது தலாலின் உடல்தான் என்பதும், அவரை நிமிஷ பிரியா கொலை செய்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து நிமிஷ பிரியாவை கைதுசெய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு நடைபெற்ற கிழமை நீதிமன்றத்தில் நிமிஷ பிரியாவுக்கு மரண தண்டனையும், உதவி செய்த ஹனானுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நிமிஷ பிரியா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக நிமிஷ பிரியாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.