யாழ் கடலில் மிதந்த கேரள கஞ்சா: பல மில்லியன் பெறுமதி
இலங்கை கடற்படையினரால் நேற்று (17) அதிகாலை யாழ்ப்பாண கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில் 140 கிலோ 40 கிராம் (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க நாட்டை சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை தொடர் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கஞ்சா பொதிகள்
வடக்கு கடற்படையினரால், யாழ் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நான்கு பொதிகள் மிதந்து வந்ததை அவதானித்த கடற்படையினர் அதனை சோதனையிட்டுள்ளதுடன், பொதியில் அடைக்கப்பட்டிருந்த 140 கிலோ 40 கிராம் கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினரின் தொடர் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளால் இந்த கேரள கஞ்சாவை தரையிறக்க முடியாமல் கடத்தல்காரர்கள் கடலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 56 மில்லியன் என நம்பப்படுகிறது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        