ஹோட்டல் அறைக்குள் அத்துமீறிய மட்டக்களப்பு உறுப்பினர்! அம்பலமான சம்பவம்
ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த 21 வயது இளம் தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், ஐக்கிய மக்கள் சக்தியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஒருவர் வியாழக்கிழமை (09) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் முடித்து கணவரைப் பிரிந்து வாழும் அப்பெண், தனது வாழ்வாதாரத்திற்காக குறித்த ஹோட்டலில் 40,000 ரூபாய் சம்பளத்திற்குச் சுத்திகரிப்புப் பணியில் இணைந்துள்ளார். சில காலமாகச் சம்பளம் வழங்கப்படாததால், அவர் பணிக்குச் செல்வதைத் தவிர்த்து வந்துள்ளார்.

ஹோட்டல் அறைக்குள் பாலியல் தொல்லை
இந்நிலையில், நிலுவைச் சம்பளத்தைத் தருவதாகக் கூறி உரிமையாளரான நகரசபை உறுப்பினர் பெண்ணை மீண்டும் பணிக்கு அழைத்துள்ளார்.
வியாழக்கிழமை (09) காலை பணிக்குச் சென்ற அந்தப் பெண், ஹோட்டல் அறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, கதவைப் பூட்டிவிட்டு உள்ளே நுழைந்த நகரசபை உறுப்பினர், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்த அப்பெண், இது குறித்துக் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் நகரசபை உறுப்பினரைக் கைது செய்த பொலிசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வௌ்ளிக்கிழமை (10) ஆஜர்படுத்தப்பட உள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.