கச்சதீவு இலங்கையின் சொத்து; இந்திய உயர் நீதிமன்றம்; தமிழக அரசியல்வாதிகள் ஏமாற்ற முடியாது!
கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை வரவேற்பதாகவும், இனிவரும் காலங்களில் கச்சதீவு விவகாரத்தை முன்வைத்து தமிழக மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்ற முடியாது எனவும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோணி பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை(9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கச்சதீவை மீட்பதாக தமிழக அரசியல்வாதிகள் கூறமுடியாது
தமிழகத்தில் தேர்தல்கள் நடைபெறும் காலங்களில், கச்சதீவை மீட்பதாகவும் அது தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான கடற்பகுதி எனவும் கூறி, அரசியல்வாதிகள் மீனவர்களின் வாக்குகளைப் பெற முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக இருந்தவரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய்யும், தனது தேர்தல் பிரசாரத்தில் கச்சதீவை மீட்பதாகக் கூறியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சதீவு இலங்கையின் கடற்பிரதேசத்திற்குள் அமைந்துள்ளது என்றும், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வர வேண்டாம் என இந்திய மீனவர்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்ற தெளிவான கருத்தை இந்திய உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை – இந்திய உறவுகள் தொடர்பிலும் நீதிமன்றம் கருத்து வெளியிட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இனிவரும் தமிழகத் தேர்தல்களில் கச்சதீவு விவகாரத்தை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தமிழக மக்கள் இந்த விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அந்தோணி பிள்ளை மரியதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.