காத்தான்குடி பாடசாலை மாணவி கூட்டு வன்புனர்வு; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
மட்டக்களப்பு காத்தான்குடி , ஆரையம்பதி பகுதியில் 15 வயது பாடசாலை மாணவியை கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.
சம்பவதினமான கடந்த சனிக்கிழமை (06) 15 வயதும் 7 மாதங்களும் கொண்ட சிறுமியை 26 வயதுடைய நபரொருவர் வீடு ஒன்றிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அவரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
தந்தை முறைப்பாடு
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் , பொலிஸில் சிறுமியின் தந்தையால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் (07) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 26 மற்றும் 32 வயதுக்கிடைப்பட்ட மூவரே கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அன்றையதினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.