கராப்பிட்டிய வைத்தியசாலையின் பெண் ஊழியரை தாக்கிய வைத்தியருக்கு நேர்ந்த கதி!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குற்றவாளியை ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் கனிஷ்ட ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், 61 வயதான டொக்டர் எஸ். சி. ஆர். பெரேரா இன்று கைது செய்யப்பட்டார்.
நேற்று புதன்கிழமை காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் மூலம் வைத்தியசாலைச் சேவைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தியதையடுத்து, அவருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது ஊழியர் ஒருவரை அவர் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையின் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணரின் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி, ஜூனியர் பெண் ஊழியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.