கண்டி வதை முகாமிலிருந்த இளைஞர்கள் பெட்ரோலை ஊற்றி எரிக்கப்பட்டனர்!
1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதை முகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு சென்று வழியில் அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து பெட்ரோலை ஊற்றி கொலை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இதனை காணாமல்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் எம்சி இக்பால் தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
எம்சி இக்பால் தெரிவிக்கும் வீடியோ
இந்நிலையில் தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் உட்பட பல சர்வதேச அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எம்சிஎம் இக்பால் இந்த வீடியோவில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எனது மனதில் நினைவில் இருக்கும் விடயங்களில் ஒன்று கண்டியின் பாடசாலையொன்றில் காணப்பட்ட வதை முகாம் பற்றியதாகவும். பல இளைஞர்கள் அங்கு சித்திரவதை செய்யப்பட்டார்கள்.
ஒரு லொறி நிறைய பிரம்புகள் அந்த கல்லூரியில் உள்ள வதை முகாமிற்கு கொண்டு செல்லப்படுவதை பார்த்தவர்கள் எமக்கு சாட்சியமளித்திருந்தனர்.இளைஞர்கள் மாணவர்களிற்கு அடித்து சித்திரவதை செய்வதற்காக அதனை பயன்படுத்தியிருக்கவேண்டும்.
தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை பேசச்செய்வதற்காக அவர்களிற்கு அடிப்பார்கள் அதன்பிறகும் அவர்கள் பேசாவிட்டால் பிரம்பால் அடிப்பார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் சித்திரவதை செய்யப்பட்டவர்களை டிரக் ஒன்றில் ஏற்றி வேறு எங்கோ கொண்டு செல்வார்கள்.
அவர்களை வேறு முகாமிற்கு கொண்டு செல்வதாக தெரிவிப்பார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் வழியில் என்ன நடந்தது என எங்களிற்கு தெரிவித்தார். '
அவர்கள் எங்களின் கைகளை கட்டி லொறியில் ஏற்றினார்கள். தனிமையான இடத்தில் செல்லும்போது அந்த டிரக்கிலிருந்து ஒவ்வொருவராக தள்ளிவிடுவார்கள். பின்னால் இரண்டு வாகனங்கள் வரும் ஒன்றில் ஆயுதமேந்திய பொலிஸார் காணப்படுவார்கள் மற்றையதில் பெட்ரோலுடன் பொலிஸார் காணப்படுவார்கள்.
டிரக்கிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டவர் தப்பியோட முயலும்போது பின்னால் வரும் வாகனத்திலிருக்கும் பொலிஸார் அவர்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் துடிதுடித்துக்கொண்டிருக்கும் போது பின்னால் வரும் வாகனத்தில் உள்ளவர் பெட்ரோலை ஊற்றி தீ மூட்டுவார் இதனை போகும் வழியெல்லாம் தொடர்ந்து செய்வார்கள்.
இவ்வாறு ஒருவரை தள்ள முயன்றவேளை அவரை உயிருடன் எரிப்பதற்கு பெட்ரோல் இல்லாத நிலை காணப்பட்டது அதன் காரணமாகவே அவர் தப்பினார்.
அவரை முகாமிற்கு கொண்டு சென்றவர்கள் அவர் அதிஸ்டசாலி என்றார்கள் அவரை வேறு ஒரு நாள் அழைத்து வருவதே அவர்களின் நோக்கம். எனினும் அதிஸ்டவசமாக மற்றுமொரு நாள் அவருக்கு வரவில்லை அவர் அந்த வதை முகாமிலிருந்து தப்பினார் உயிர் பிழைத்தார்.
அவரே பின்னபு எங்களின் ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். இது கண்டியின் அனிவத்தை என்ற பகுதியில் இடம்பெற்றது.கண்டியில் அந்த பகுதியில் வீதிகள் இருள்மயமாக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.