கருவை கலைக்க நினைத்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
அவைசாவளையில் தனியார் மருந்தகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட மருந்தை உட்கொண்டதால், மூன்று மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ருவான்வெல்ல பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ருவான்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விஷத்தன்மை வாய்ந்த மருந்து
கடந்த 05ஆம் திகதி, இந்தப் பெண் தனது கணவருடன் அவிசாவளை பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றுக்கு சென்று, கர்ப்பத்தை கலைப்பதற்காக மருந்து கோரியுள்ளார்.
இந்நிலையில் மருந்தகத்தில் இருந்து உடலில் செலுத்துவதற்காக மருத்துவ கருவி ஒன்றும் மற்றும் குடிப்பதற்காக மூன்று மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்னர், குறித்த பெண்ணுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால், தனியார் வைத்திய நிலையம் ஒன்றுக்கு சென்ற நிலையில் , அங்கு சிகிச்சை வழங்க மறுத்து, அரச வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிகிச்சைக்காக அவிசாவளை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 06ஆம் திகதி ஹோமாகம அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.
பெண் உட்கொண்ட மருந்து, வைத்தியரின் பரிந்துரையின்றி உட்கொள்ள அனுமதியில்லாத விஷத்தன்மை வாய்ந்த மருந்து எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தின் பிரேத பரிசோதனையை ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் சிந்தக உதய குமார மேற்கொண்ட நிலையில், சடலத்தின் பிரேத பரிசோதனையை ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரணீத செனவிரத்ன மேற்கொண்டார்.
இதன்போது, வெளியிடப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிரேத பரிசோதனை வைத்திய அறிக்கையின் அடிப்படையில், இறந்த பெண்ணின் உடல் பாகங்களையும், மூன்று மாத கருவின் உடல் பாகங்களையும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, இறப்புக்கான காரணத்தை குறிப்பிடாமல், திறந்த தீர்ப்பை வழங்க, பிரேத பரிசோதனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.